top of page
rotaractmfc

'தவறான தனி மனித மனநிலையின் எச்சமானது, சுதந்திரமான சிறார்களின் வாழ்வுக்கு அச்சமாகிறது!'

Pedophilia பற்றி அறிந்து கொள்வோம்.

Written by: Sajitha Chandran, Faculty of Medicine, University of Colombo)


நம் சமூகத்தின் மிகவும் விளிம்புநிலை குடிமக்களாக உள்ள குழந்தைகளுக்கு வன்முறை மற்றும் அச்சமில்லாத வாழ்க்கையை உறுதி செய்ய நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். பாதுகாப்பு, மகிழ்ச்சி அமைதி நல்வாழ்வு உள்ளடங்கிய குழந்தை பருவமானது ஆக்கபூர்வமான வாழ்க்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்பாகும். குழந்தைப்பருவமானது பொதுவாக எந்த அளவிற்கு குதூகலமும் கொண்டாட்டமும் நிறைந்ததோ அதே அளவிற்கு ஆபத்துக்களையும் உள்ளடக்கிய விளிம்புநிலை பருவமாகும். இவ்வாறு பல்வேறுபட்ட ஆபத்துக்களினாலும்,சிறுவர் துஷ்பிரயோக செயற்பாடுகளினாலும், வன்முறைகளினாலும் சிறுவர்களின் சுதந்திரமான வாழ்க்கை சூழல் முற்றாக பாதிக்கப்பட்டு செயலிழக்கிறது.


கடந்த சில ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு வகையான பாலியல் வன்கொடுமைகளில் pedophelia எனப்படும் மனநோயின் தாக்கம் பாரிய பங்கு வகிக்கின்றது.

Pedophilia என்பது வளர்ந்த மனிதன் ஒருவன் அவனது பாலியல் தேவைகளை பருவமடையாத சிறுவர்களிடத்தில் பிரயோகிக்க எத்தனிக்கும் ஒருவித உளரீதியான பிரச்சினை ஆகும். இந்த தூண்டல் அவர்களை 13 வயதிலும் குறைந்த சிறுவர்களுடன் பாலியல் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கின்றது. இவ்வாறான எண்ணங்கள் அவர்களில் சுமார் ஆறு மாத காலங்கள் நீடிக்கும். இந்நிலை ஆண்களில் பொதுவானது. இவர்களது பாலியல் ஈர்ப்பு பருவமடையாத சிறுவர்களில் ஆண், பெண் வேறுபாட்டை காண்பிக்காது. ஆனால் பருவமடைந்தோரில் இவர்களது பாலியல் நாட்டம் நபருக்கு நபர் வேறுபடும்.



சமூகத்தில் இம்மனநிலையின் பரவல் தொடர்பில் சரியாக அறியப்படவில்லை. ஆயினும் ஆண்களில் 1%-5% ஆனோர் இந்நோய் நிலைக்கு ஆளாகியுள்ளமை ஆய்வுகளில் அறியப்பட்ட உண்மை. பெண்களில் இச்சதவீதம் ஆண்களை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.



உளவியல் ரீதியான நோய்களை பிரித்தறிவதற்கான அளவுகோல்களை உள்ளடக்கிய, சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புத்தகம் DSM 5 ஆகும். இந்நூலிற்கு அமைய pedophilia ஆல் பாதிக்கப்பட்ட நபரை இனங்காண குறித்த நபர் கீழுள்ள அளவுகோல்களை நிவர்த்தி செய்பவராக இருத்தல் வேண்டும்.



1. குறைந்த பட்சம் ஆறு மாத காலத்திற்கு பருவமடையாத சிறுவர்களுடன் (13 வயதிற்கு உட்பட்டோர்) மீள மீளத் தோன்றும் பாலியல் ரீதியான தேவைகள், ஆசைகள், பழக்கவழக்கங்கள் என்பவற்றை நிவர்த்தி செய்து கொள்ளல்.


2. குறித்த நபர் இவ்வாறான தூண்டல்களுக்கு இணங்க செயற்படுதல் அல்லது இவ்வாறான தூண்டல்கள் குறித்த நபரில் குறிப்பிடத்தக்களவு மன அழுத்தத்தை உருவாக்குதல் அல்லது சமூக மற்றும் தொழில் ரீதியான விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தல்.


3. குறைந்தபட்சம் 16 வயதினை உடையவராக மற்றும் குறித்த பருவமடையாத சிறுவரிலும் ஐந்து வயது கூடியவராக இருத்தல். எனினும் பின் கட்டிளமைப்பருவத்தில் உள்ள நபரொருவர் 12 அல்லது 13 வயதுடைய சிறுவர் ஒருவருடன் தொடர்ச்சியான பாலியல் உறவை பேணுவதும் இதனுள் அடங்கும்.


4. இந் நிலைக்கு ஆளான ஒருவர் அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள யாரேனும் ஒருவரின் உதவியை தாமாக நாடல் மிகவும் அரிதானதாகும். நீதிமன்ற உத்தரவின் கீழ் மட்டுமே இவர்களுக்கான வழிகாட்டலும் ஆலோசனையும் மற்றும் சிகிச்சையும் அளிக்கப்படும். சிறுவர் ஆபாச படங்களின் தொடர்ச்சியான பாவனை paedophilia ஆள் ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.



இந்நிலைக்கு ஆளானோர் மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற வேறு உளவியல் பிரச்சனைகளுக்கு உட்பட்டவராக மற்றும் போதைப்பொருள் பாவனை உள்ளவராக இருக்கலாம்.



இம்மனநிலை ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றாலும் சிறுவயதில் பாலியல் ரீதயான துன்புறுத்தல்களுக்குள்ளானவர்கள் மத்தியில் இந்நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகமுண்டு என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் சிறுவயதில் பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளான சகலரிலும் இவ்வாறான தூண்டல்கள் உண்டாவதில்லை.மேலும் மூளையுடன் தொடர்புடைய நோய் நிலைமைகளை கொண்டவர்களில் சிலர் (உதாரணமாக காக்கை வலிப்பு)காலப்போக்கில் Paedophilia நிலைக்கு ஆளாகலாம் என்பது அறியப்பட்டுள்ளது.



சிறுவர் துஷ்பிரயோகதாரர்கள் மன அழுத்தம் காரணமாகவோ சந்தர்ப்ப சூழ்நிலைகளை சாதகமாக்கிக்கொள்ளும் நோக்குடனோ சிறுவர் துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பர். ஆனால் Paedophiles சிறுவர்களை குறிவைத்து தம் தேவைகளை நிறைவு செய்பவர்களாக இருப்பர்.இவர்கள் தாம் நெருங்கி பழகும் சமுக வட்டத்திலிருந்து தமது தேவைகளை அடைய முற்படுவர். இந்நோய்க்கான மனநிலை பரம்பரையாக கடத்தப்படும் இயல்பா? அல்லது குடும்ப பழக்கவழக்கங்கள் சார்ந்ததா? என்பது குறித்த ஆதாரங்கள் இன்னும் சரியாக கண்டறியப்படவில்லை.



இவ்வாறு Paedophilia தொடர்பில்ஆராயும் போது சகல Paedophiles ம் சிறுவர் துஷ்பிரயோகதாரர்களா என்ற சந்தேகம் எழுகிறது. இம்மனநிலை உடையோர் தமது தேவைகளை அல்லது தூண்டல்களை நிறைவேற்றிக்கொள்ள சிறார்களை பயன்படுத்தாத வரையில் அவர்கள் துஷ்பிரயோகதாரர்களாக கருதப்படமாட்டார்கள்.மேலும் துஷ்பிரயோக செயல்பாடுகளில் ஈடுபடும் சகலரும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களல்லர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறுவர் துஷ்பிரயோகதார ர்களில் 40% மானவர்களே இந்நிலைக்கு ஆளாகியருப்பர் என்பது ஆய்வுகளின் வெளிப்பாடாகும்.தமது இத்தூண்டல்களை நிறைவேற்ற சமுக வளைதளங்களை இவர்கள் ஒரு ஊடகமாக பயன்படுத்துகின்றனர். சிறார்களுடன் நல்லுறவைப்பேணி நட்பு வட்டத்தை உருவாக்கி பின்னர் தேவைகளை அடைகின்றனர்.



சிறுவர்கள் தொடர்பாக வகைகூறும் பொறுப்பு ஒட்டு மொத்த சமூகத்தின் கடமையாகும். அந்த வகையில் இவ்வாறான மனநிலையை கொண்ட நோயினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் உரிய சிகிச்சைகளுக்கு பங்கேற்கவும் சுகாதார உத்தியோகத்தர்களின் உதவியை நாடவும் பரிந்துரைக்கப்படுகின்றனர்.மேலும் சிறார்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் அதற்கேற்ற சூழலையும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் ஏற்படுத்த முன்வர வேண்டும். பாதுகாப்பான தொடுதல் பற்றியும் பாதுகாப்பான விதிகளையும் எளிமையாகவும் விளக்கமாகவும் சிறார்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.



பாதுகாப்பு நமது உரிமை எனும் பட்சத்தில் இந்நோயின் பிடியில் உள்ளவர்களை தகுந்த சிகிச்சைக்குட்படுத்தி அவர்களையும் அதனால் பாதிப்பிற்குள்ளாகும் சிறுவர் சமுகத்தையும் பேணிக்காப்போம். பாதுகாப்பு என்பது வெறும் சாதாரண நிகழ்வன்று;மாறாக அனைவரின் ஒருமித்த மற்றும் பொது மூலதனத்தின் விளைவாகும் என்பதை உணரந்து செயற்படுவோம்



References:


Diagnostic Statistical Manual of mental disorders 5th edition (DSM-V) by the American Psychiatric Association.

Shorter Oxford Textbook of Psychiatry

https://blogs.bmj.com/medical-ethics/2017/11/11/pedophilia-and-child-sexual-abuse-are-twodifferent-things-confusing-them-is-harmful-to-children/



24 views0 comments

Comments


bottom of page