top of page

ஓர் பிள்ளை எவ்வாறு மரமாய் எழுகிறது என்பதை மனதில் விழும் “உழவியல்” எனும் விதையே தீர்மானம் செய்கிறது

(Written by: Sujan Sugumaran, Faculty of Medicine, University of Colombo)

கொரோனா வைரஸ் காலமும் , சிறுவர் துஷ்பிரயோகமும்

—————————————————

சிறு மலராக மலர்ந்து எதிர்காலம் பற்றிய கனவுகளுடன் வளரும் பிஞ்சுக்குழந்தைகளைப் பாதுகாத்து ,பூங்காவாக பூத்துக்குலுங்க விடுவதை விட்டு அவர்களை நசுக்கி எதிர்காலத்தை வெறும் சருகுகளாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.


தாயின் கருவிலிருந்து சிதையாமல் வெளியே வரும் போதே நாம் வெற்றி பெற்று விடுகிறோம் என்று உரைத்த பாடல்கள் எல்லாம் தற்போது கைகட்டி வாய் பொத்தி நடக்கும் விடயங்களை வேடிக்கைப்பார்த்து நிற்கின்றன.



சிறுவர் துஷ்பிரயோகம் எனும் வார்த்தை இப்போது மலிந்து விட்டது. சிறுவர் துஷ்பிரயோகம் என்பது 18 வயதிற்கு கீழ் உள்ளோரை உடல், உள ,பாலியல் ,பொருளாதார ரீதியாக, அவர்களின் ஆரோக்கியம் , மற்றும் இருப்பிற்கு தீங்கு இழைக்கப்படும் வகையில் நடைபெறும் செயல்கள் ஆகும். COVID-19 வைரஸ் உலகம் முழுதும் பரவி வரும் நிலையில் இச் சிறுவர் துஷ்பிரயோகமும் அதிகரித்து வருகிறது.



COVID-19 வைரஸ் பரவி ஒரு வருட காலம் ஆகிய நிலையில் உலகம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைவரும் வீடுகளில் முடங்கிக்கிடக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. ஓர் இரு நாட்கள் என்ற நிலையைக் கடந்து மாதக்கணக்காக முடங்கிக் கிடக்க வேண்டிய நிலையில் சிறுவர்களிற்கு மிகப்பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது இந்த சூழ் நிலை. பள்ளி சென்று சக நண்பர்களோடு துள்ளி விளையாடிய பச்சிளம் குழந்தைகள் நான்கு சுவற்றிற்கு நடுவில் முடங்கி கிடந்தால் அது மிகப்பெரிய உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த உளவியல் அழுத்தம் ஒரு கட்டத்தில் எல்லை மீறி அவர்களின் செயற்பாடுகளை பெற்றோர்கள் சமாளிக்க முடியாத நிலையில் சிறுவர்கள் உள, உடல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள்.



பாடசாலைகள் மூடப்பட்டு 8 மாதங்கள் கடந்து விட்டது. சிறுவர்களிடம் கல்வி பாரிய அளவிலே பாதிக்கப்பட்டு உள்ளது. அதிலும் இணையக் கல்வி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இது சிறுவர்களை பாரிய அளவில் பாதித்து உள்ளது. கணனி, இலத்திரனியல் உபகரணங்கள், இணைய இணைப்புக்கள் என்பன அனைத்து மாணவர்களிடமும் இல்லாத நிலையில், கல்வியிலே பாரிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பகுதியினர் கல்வி கற்க, இன்னும் ஒரு பகுதியினர் கற்க முடியாத நிலையை இது உருவாக்கி உள்ளது. இது உளவியல் ரீதியான பாரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.



இதைவிட பல குடும்பங்கள் வேலை இழந்து பொருளாதார ரீதியாக துன்புறும் நிலையில் சிறுவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மற்றும் covid19 அச்சம் காரணமாக சிறுவர்களிற்கு ஏதும் நோய்கள் ஏற்படும் நிலையிலும் கூட அச்சம் காரணமாக வைத்தியசாலை செல்ல முடியாத நிலையில் துன்புறுகிறார்கள்.



விடுகளில் முடங்கி இணையத்தில் அதிக நேரம் சிறுவர்கள் செலவிடுவதால் பெற்றோரிடம் இருந்து விலகி உள்ளார்கள். ஆகவே இணையத்தில் ஆபாச படங்களிற்கு அடிமையாதல் போன்ற விடையங்களும் இடம்பெறுகிறது. இதைவிட பாடசாலைகளால் வழங்கப்படும் அரவணைப்பு, உணவு வசதிகள் வறிய மாணவர்களிற்கு கிடைக்கப்பெறாத நிலை உருவாகி உள்ளது.



மற்றும் பாதை ஓரங்களில் வாழும் வீடற்ற சிறுவர்களிற்கு பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களும் அதிகரித்து வருகிறது..மற்றும் குடும்ப அங்கத்தவர்களிடம் அதிக மது பாவனை , போதைப்பொருள் பாவனை என்பன துஷ்பிரயோகத்தை அதிகரித்து உள்ளது.



இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு மையத்தின் அறிக்கையின் படி, ஊரடங்கு காலத்தில் மட்டும் சிறுவர் வன்முறைகள் 33 வீதத்தால் அதிகரித்து உள்ளது. 12 பாலியல் ரீதியாக வன்முறைகள் 1st of March-31st of march வரை பதிவாகி உள்ளது.மற்றும் 65 பாலியல் வன்முறைகள் சித்திரை மாதத்திலும், 100 வன்முறைகள் வைகாசி மாதத்திலும் பதிவாகி உள்ளது. இதைவிட 3500 சிறுவர் வன்முறைகள் 16th of march - 16 th of june வரை பதிவாகி உள்ளதாக NCPA (NATIONAL CHILD PROTECTIVE AUTHORITY) அறிவித்து உள்ளது.



இன்னும் இந்த உலகம் COVID-19 தாக்கத்தின் நடுப்பகுதியிலேயே உள்ளது. இதுவரையிலே பல வன்முறைகள் சிறுவர்களிற்கு எதிராக அதிகரித்து உள்ள நிலையில், இவ்வாறே சென்றால் சிறுவர் வன்முறை என்பது COVID-19 ஐ விட அபாயமான ஒன்றாக மாறிவிடும். எனவே சிறுவர்களின் மன நிலையை உணர்ந்து அவர்களை உடல் , உள, பாலியல், பொருளாதார ரீதியாக பாதுகாத்து அவர்கள் தேவைகளை நிறைவேற்றல் அரசினதும் , எமதும் கடமையாகும்....



15 views0 comments
bottom of page