top of page

சிறுவர் துஷ்பிரயோகம்: பிஞ்சு மனங்களில் பதிக்கப்படும் நீங்கா தடயம்.

Updated: Dec 5, 2020

Written by: Shahri Rahmath, Faculty of Medicine, University of Colombo


மானுட வாழ்வின் காலகட்டங்களில் பசுமையானதும், மிகவும் இனிமையானதுமாகத் திகழ்வது குழந்தைப் பருவம். ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பழக்கப்பட்டு அவனது சுயத்தைச் செதுக்குவதில் பெரும் பங்கு வகிப்பதாக அமையும் குழந்தைப் பருவமும், அதைத் தொடர்ந்து வரும் சிறுபராயமும், என்றும் நிறைந்திருக்கும் அழகிய நினைவுகளாகும். இப்பருவம் எல்லோருக்கும் ஒரேமாதிரியானதாக அமைவதில்லை. சிலருக்கு மலர்த்தூவலாகவும், பலருக்கு முட்பாதையாகவுமே இருக்கும்.


வெள்ளைக் காகிதமொன்றில் விரும்பும் வர்ணங்களைத் தீட்டி ஓவியம் படைப்பதற்கு ஒப்பானது குழந்தைகளின் உள்ளங்களில் மனப்பாங்கையும், இச்சமூகம் மீதான கண்ணோட்டத்தையும் உள்ளிடுவது. தோற்ற அளவில் பெரிதாகத் தெரியாவிட்டாலும் மனித சமுதாயத்தின் வளர்ச்சியிலோ வீழ்ச்சியிலோ முக்கிய இடத்தைப் பிடிக்கும் காரணியாக காணப்படுவதால், இத் தலைப்பைப் பற்றிய தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமான ஒன்றாகும்.


சிறுவர் துஷ்பிரயோகம் எனும் பதம் வரைவிலக்கணப்படுத்தப்படின், 18 வயதிற்கு கீழானோரை, உடல், உள/மானசீக, பாலியல், பொருளாதார, ஆன்மீக ரீதியாக, அவர்களின் ஆரோக்கியம், முன்னேற்றம் மற்றும் இருத்தலுக்குக் கேடு விளைவிக்கும் வகையில், பொறுப்பு, அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தி இழைக்கப்படும் அநியாயம் அல்லது புறக்கணிப்பு எனலாம்.


சிறுவர் வன்கொடுமைகள் பாரியதொரு சர்வதேச பிரச்சினை மட்டுமல்லாது, தவிர்க்க முடியாத பின்விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் தவறொன்றாகும். பல நடுத்தர மற்றும் கீழ் வருமான நாடுகளில் தரவுகள் தெளிவாக பதியப்படாமல் இருப்பதால், சர்வதேச ரீதியிலான திட்டவட்டமான விபரங்களை, அவற்றின் காரணிகளை நிச்சயப்படுத்த முடியாமை கவலைக்குரியது எனினும், உலகின் அனைத்து பாகங்களிலும் ஏதோவொரு வடிவில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.


இரண்டு தொடக்கம் நான்கு வயது வரையான குழந்தைகளில் 4ல் 3 பேருக்கு உடல் ரீதியான வன்முறைகளும் உள நெருக்கடிகளும் இழைக்கப்படுகின்றன. நம்ப முடிகின்றதா? இவை அனேக இடங்களில் பெற்றோராலும் பகாதுகாவலர்களாலுமே நடக்கின்றன. பெண்களில் ஐந்தில் ஒருவரும் ஆண்களில் பதின்மூன்றில் ஒருவரும் , சிறுபராயத்தில் பாலியல் துஷ்பிரயோகங்கள் இழைக்கப்பட்டு துன்பத்துக்குள்ளாக்கப்பட்டதாக பதிவுகள் சான்று பகர்கின்றன. துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவர்கள் கல்விச்செயற்பாடுகளில் பின்தங்குவதால் பாடசாலைக்கல்வியை வெற்றிகரமாக முடிக்காமல் இருப்பதற்கு 13% சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.


2019ல் மட்டும், உலகளாவிய மட்டில், ஏறக்குறைய ஒரு பில்லியன் சிறுவர்கள் துஷ்பிரயோகப்படுத்தப் பட்டிருக்கின்றனர். இலங்கையில் 8558 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் அதிகமானவை (2342) 'சிறுவர்கள் மீதான வன்கொடுமைகள்' எனும் வகையில் சேர்கின்றன. இதில் ஆச்சர்யமிக்க விடயமென்னவென்றால் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு சம்பவங்கள்(1167) அறிவிக்கப்பட்டுள்ளன.

இவை (WHO) உலக சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கையிலிருந்து பெறப்பட்டவையாகும்.


மேலும், பெண்பிள்ளைகள் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதும் இற்றைய நாளில் வளர்ந்து வரும் சர்வதேச பிரச்சினைகளுள் ஒன்று. 120 மில்லியன் எண்ணிக்கையான பெண்பிள்ளைகளும் 20 வயதிற்குட்பட்ட யுவதிகளும் கடந்த வருடம் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படிருக்கின்றனர். இவற்றில் கணிசமான தொகையினர் மரணித்தும் பலர் மனநிலை பாதிக்கப்பட்டும் எதிர்காலம் சீர்குலைக்கப்பட்ட நிலையிலும் உள்ளனர்.



துஷ்பிரயோக வகைகள்

அறிவியலில் பல மைல்கற்களைத் தொட்டிருக்கும் இந்நாளிலும், உலகின் மூலை முடுக்குகளில் கூட சிறுவர் மீதான வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. நம் வீடுகளில், வீடுகளுக்கருகில் நடப்பதையே வன்முறைகளென இனங்கானமுடியாமல் இருந்து விடுகிறோம். துஷ்பிரயோகங்களின் வகைகளையும், நிகழ்த்தப்படும் வடிவங்களையும் பற்றி கற்றுக் கொள்வதன் மூலம் இவ்வறியாமையில் இருந்து தவிர்ந்து விடலாம்.



உடல்சார் துஷ்பிரயோகங்கள் வெளிப்படையானவை. இலகுவில் கண்டுபிடிக்கப்படுபவை. மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்படக்கூடியவை. பல சந்தர்ப்பங்களில் பாடசாலைகளிலும் விடுதிகளிலும் ஒழுக்காற்று தண்டனைகளாக வழங்கப்படுகின்றன. முறையற்ற, ஒழுக்கம் தவறிய அல்லது மனப்பாங்கு குன்றிய பெற்றோர்களாலும், உறவினர்களாலும் சிலவேளை ஆசிரியர்களாலும் பிரயோகிக்கப்படுகின்றன.



பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உடலில் தேய்காயங்கள், கீறல்கள், வீக்கம், எரிகாயங்கள், எலும்பு முறிவுகள் போன்ற அறிகுறிகளை கொண்டிருப்பர். இவ்வாறானவர்கள் சதாவும் பயந்தவர்களாகவோ, இலகுவில் உச்சகோபமடைபர்களாகவோ இருப்பர். குறித்த ஒருவரைப் பார்த்து அஞ்சுபர்களாகவும், சகவயதினருடன் பழகாது தனிமைப்பட்டவர்களாகவும் இருப்பர். காயங்களை மறைக்கும் வண்ணம் நீண்ட கைகளுடைய பெரிய ஆடைகள் அணிவதை விரும்புவர்.



இவ்வாறான உடலியல் வன்முறைகள் கைகளாளோ அல்லது வேறு உபகரணங்களை பயன்படுத்தியோ இருக்கலாம். தலை, கை, கால்கள், முதுகு, நெஞ்சு, முகம் போன்ற இடங்களில் வன்மையாக அடித்தல், அறைதல், குத்துதல், வன்மையாக கிள்ளுதல், எரித்தல், சூடு வைத்தல், மூச்சுதிணறச் செய்தல், உணவு, உறக்கம் போன்றவற்றிற்கு அனுமதி வழங்காதிருத்தல், கடுமையான ஆபத்தான தண்டனைகளை வழங்குதல் என உடல்சார் துஷ்பிரயோகங்கள் பல்வேறுபடும்.



உள ரீதியான துஷ்பிரயோகங்கள் பார்வைக்கு அப்பாற்பட்டவை. எனினும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. இளம்பராயத்து கொடுநினைவுகள் பசுமரத்தாணியாய்ப் பதிந்து வாழ்வை புறட்டிப்போட வல்லவை. நீங்கா வடுவாக ஒளிந்திருந்து அக்குழந்தையின் பண்புகளில், நடத்தைகளில், அறிவுசார் செயற்பாடுகளில், கல்வி வளர்ச்சியில் பாதிப்பு செலுத்தக் கூடியவை. இவ்வாறான அநீதிகள் கவனமாக அவதானிக்கப்பட்டு, தகுந்த முறையில் தீர்வு காணப்பட வேண்டியவை.



சிறுவரின் சுயமரியாதை, சுயமதிப்பு, தன்னார்வம், தன்னம்பிக்கைக்கு பாதகம் விளைவிக்கக்கூடியவாறு சொல், செயல்கள் மூலம் இழைக்கப்படும் வன்முறைகள் உளம் சார் துஷ்பிரயோகங்களில் அடங்கும்.


அன்பு செலுத்தாமை, சிறுவர்களின் தேவையுணராமை, சொற்களால் தாக்குதல், அளவுக்கு மீறிய சத்தத்துடன் திட்டுதல், தகாத இழிய சொற்களை சகஜமாக பிரயோகித்தல் போன்றனவும் இதில் சேர்த்தியே. தவறுகளை சுட்டிக் காட்டும் போது பகிரங்கமாக அவமானப்படுத்தல், அவர்களின் முயற்சிகளை பரிகாசம் செய்தல், உணர்வு ரீதியாக மிரட்டுதல், அவர்களது கருத்துக்களை செவிமடுக்காமை போன்றவை பிற்காலத்தில் அவர்களது சுய நம்பிக்கைக்கும், குடும்பத்துடனான பிணைப்புக்கும் பெரும் இடராக வளரும்.

இவற்றில் சில அன்றாடம் வாழ்க்கையில் நடப்பவையாக இருக்கலாம்.தனிப்பட்ட மனநிலைகளிலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் தங்கியிருப்பவை.இவ்வாறானவை துஷ்பிரயோகத்தில் அடங்காது என்றாலும் தொடர்ச்சியாக வேண்டுமென்றே ஒருவரை இச்செயற்பாடுகளுக்கு உட்படுத்துவது வன்முறையாகவே கருதப்படும்.



உளரீதியான வன்முறைகளுக்குள்ளான சிறுவர்கள் பயந்த சுபாவம் கொண்டவர்களாகவும், உணர்வுரீதியாக யாருடனும் (முக்கியமாக துஷ்பிரயோகிப்பவருடன்) ஒட்டாமலும் இருப்பார்கள். தீவிர நடத்தைகள், வயதுக்கு பொருந்தாத செயற்பாடுகள் போன்றன எச்சரிக்கும் பண்புகளாகும். உதாரணமாக, ஆரம்ப பள்ளி சிறுவர்கள், முன்பள்ளி வயதையொத்தவர்களின் நடத்தைகளை காட்டுதல்- விரல் சூப்புதல்.



பாலியல் வன்முறைகள் எனப்படுவது சிறுவர்களை பாலியல் ரீதியாக கட்டாயப்படுத்தி தூண்டச் செய்வது அல்லது வன்புணர்வு செய்தல் ஆகும். பாலியல் வன்கொடுமைகள் பெற்றோர்களிடம் பிள்ளைகள் குறித்து இருக்கும் அச்சங்களில் முதன்மையானதென நீங்கள் நினைக்கலாம் ஆனால் அநேக சந்தர்ப்பங்களில் வேலிகளே பயிர்களை சிதைப்பதுண்டு. துஷ்பிரயோகர்கள் பெற்றோர்களாக, நெருங்கிய உறவினர்களாக இருப்பதே அவர்கள் எதிர்கொள்ளும் மிகக் கொடிய சாபம். தொடுகை மூலம் மட்டுமே பாலியல் துஷ்பிரயோகங்கள் நடைபெறும் என்பது இல்லை. வெறும் வார்த்தைகளால் கூட ஏற்படலாம் இதுகுறித்து பிள்ளைகளை அறிவு ஊட்டுதல் அவசியம்.



பாலியல் வன்முறைகளாக வன்புணர்வு, வாய் மூலமான பாலியல் கொடுமைகள், தகாத தொடுகை (முத்தமிடுதல், தேய்த்தல், சுய இன்பம்) , தகாத வகையில் பாலியல் ரீதியாக பேசுதல், வயதை மீறிய பகிடிகள், சிறுவர்களின் முன் உடை நீக்குதல், மிரட்டுதல் போன்றவற்றைக் கூறலாம் பாலியல் ரீதியான எண்ணங்களுடன் ஒரு குழந்தையை வளர்ப்பது அல்லது அன்பு செலுத்துவதும் துஷ்பிரயோகமே.



பாலியல் ரீதியாக வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்கள் பின்வரும் அறிகுறிகளை வெளிக்காட்டுவர். வயதுக்கு மீறிய பாலியல் அறிவு உடையவர்களாக இருப்பர், குடும்ப அங்கத்தவர்கள் நண்பர்களுடன் உணர்வு ரீதியாக தூரமாக்கபட்டவர்களாக நடப்பர், துஷ்பிரயோகம் இழைப்பவர் மீது வெறுப்பு அல்லது வெட்கம் கொண்டிருப்பர், அடிக்கடி மனதை பாதிக்கும் கனவுகளை எதிர்கொள்வர். சில வேளைகளில் பாலியல் ரீதியாக பரவும் நோய்களின் அறிகுறிகளை வெளிக்காட்டுவார்கள். வழமைக்கு மாறாக அறிகுறிகள் (synptoms) தென்படின் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்வது சிறந்தது.



மேலும் உடலிலும் காயங்கள், கீறல்கள், கண்டுதல் போன்ற தடயங்கள் காணப்படலாம். உள ரீதியான வன்முறைகளுக்கு உட்பட்டவர்களை விட பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோர்களை கண்டுபிடிப்பது அரிது. வெளித்தோற்றத்திற்கு மிகவும் இயல்பாக இருப்பவர்களும் இவ்வாறு பாலியல் துன்பங்களுக்கு உள்ளாகின்றனர் என பல தரவுகள் கூறுகின்றன.


ஆன்மீக ரீதியிலான துஷ்பிரயோகங்கள் சிறுவர்களின் அல்லது இளம்பிராயத்தினரின் மத, ஆன்மீக நோக்கிற்காக அவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறைகள். தமது குடும்ப, மார்க்க வழக்கத்திற்கு மாற்றாக சிறுவர்கள் வேறு சமயங்களைப்பின்பற்ற முற்படும்போது அவர்களை துன்புறுத்தல், வஞ்சித்தல் மற்றும் ஆணவக்கொலை செய்தல் போன்றவற்றைக் குறிக்கும்.



உடல், உள பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்றே பிள்ளையின் அத்தியாவசிய தேவைகளில் சிறத்தையற்று இருத்தல், அன்பு தேவைகளை புறக்கணித்தல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தில் கவனம் இன்மை போன்ற நடத்தைகளும் சிறுவர் துஷ்பிரயோகம் ஆகக் கருதப்படுகின்றன.


எம் சமூகத்தில் பல மட்டங்களில் சிறுவர் உரிமை மீறல்களும், துஷ்பிரயோகங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. முதலில் தத்தமது வீடுகளில் இருந்து ஆரம்பியுங்கள். பிள்ளையுடன் உணர்வுபூர்வமாக நெருங்கி அன்பான வார்த்தைகளால் அரவணைத்து கலந்துரையாடுங்கள். கோபப்படவோ, அதிர்ச்சி அடையவோ செய்யாதீர்கள். அமைதியான முறையில் பேசி அவர்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ளுங்கள். இரகசியத் தன்மையை பாதுகாப்பதாக நம்பிக்கை ஊட்டுங்கள். தகுந்த முறையில் அதனை உறுதிப்படுத்திய பின்னர் உங்களால் நேரடியாக தீர்வு காண முடியுமாயின் உதவுங்கள் மேலதிக உதவிக்கு தேசிய சிறுவர் துஷ்பிரயோக அவசர தொலைபேசி இணைப்பு மூலம் (இலங்கையில் "1929") தொடர்பு கொண்டு சிறுவர் பாதுகாப்பு சேவைகளைப் பெற்றுக் கொடுங்கள்.

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு இலங்கைச் சட்டத்தில் பல்வேறு தண்டனைகளும் நஷ்டயீடுகளும் உள்ளன. அவற்றை அறிந்து கொள்வதும் பயமின்றி பயன்படுத்திக் கொள்வதும் ஒவ்வொரு பெற்றோரினதும் சிறுவர்களினதும் கடமையாகும். இவ்வகையில் துஷ்பிரயோகம் குறித்து தெளிவான அறிவை அவர்களுக்கு வழங்குவது அவசியம். அதேவேளை, நேர்மையாக, தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் கண்டிப்பதற்கும், துஷ்பிரயோகிப்பதற்கும் இடையிலான வேறுபாட்டையும் வேற்றுமை காணத் தெரிய வேண்டும்.



சிறுவர்களது உள்ளங்கள் தூய்மையானவை. அவர்களது உலகம் வெகுளியானது. அவற்றை மலர்களைக் கொண்டு அலங்கரிப்போம், எம்மில் இருக்கும் எண்ணங்களாலும் வன் செயல்களாலும் அவ்வெண்மையில் கறை பூசாதிருப்போம் !



இவ்வாக்கத்திற்கான தரவுகள் பின்வரும் தளங்களிலிருந்து பெறப்பட்டன:

https://www.who.int/news-room/fact-sheets/detail/child-maltreatment https://s.docworkspace.com/d/AMifg0_vxJ406pXF3JmnFA http://www.thefirststep.org.uk/wp-content/uploads/2015/04/Types-of-abuse-and-examples.pdf



14 views0 comments
bottom of page