சிறுவர் துஷ்பிரயோகத்தின் ஆபத்துக் காரணிகள்
Written by: Eluxana Baskaran
ஒரு தனிமனிதன் ஆளுமை மிக்கவனாகவும், ஆக்கபூர்வமானவனாகவும் தழைத்து வளர ஆணி வேராக விளங்குவது அவனது சிறுபிள்ளை பருவமாகும். அடித்தளம் பலமானதாகவும், உறுதியானதாகவும் இருக்குமிடத்து கட்டடம் ஓங்கி உயர்ந்து நிலைத்திருக்கும். அது போலத்தான் சிறுவர் பருவமென்பது அர்த்தமுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் அமையப்பெற்றால் சிறந்த எதிர்காலம் சிறுவர்களுக்கு வாய்க்கப் பெறும். இன்றைய சிறுவர்களின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலமுமாகும்.
தற்போது தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. மனிதனும் பல்வேறு வழிகளில் முன்னேறிச் செல்கின்றான். எவ்வாறாயினும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் இன்றும் பேசுபொருளாக இருப்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சியை பூரணப்படுத்தாமல் உள்ளது எனலாம். பண்டைய காலம் தொட்டு மனிதன் எப்போதும் சமூகமயப்பட்டவனாக வாழ்வது இன்றியமையாததாகும். சிறார்களும் ஒரு சிறந்த தனிமனிதனாக சிறகடித்து பறக்க சமூகத்தில் உள்ள பெரியவர்களின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்படுகிறது. அவ்வாறாக நம்மை நாடி வருபவர்களின் தேவையை புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு பாதுகாப்பான வளரும் சூழலை உறுதிப்படுத்திக் கொடுப்பதும் பெரியவர்களான எம் ஒவ்வொருவரதும் கடமையாகும். இதன்படி செய்ய தவறுமிடத்து அவற்றின் பாரிய விளைவுகளை மிக விரைவில் நாம் எதிர்நோக்கவும் நேரிடும்.
சிறுவர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையையும் நியாயப்படுத்த முடியாது. துஷ்பிரயோகத்திற்கு முகங்கொடுக்கும் சிறுவர்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாத இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். இதனால் அவர்களின் குதூகலமான சிறுவர் பருவம் பாழடைவதுடன் எதிர்காலமும் கேள்வியாகிறது. எனவே பொறுப்பான பெரியவர்களான நாங்கள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் ஏற்படுவதற்கு முன்னரே விழிப்புடன் அவர்களை பாதுகாக்க வேண்டும். இதற்காக அவை பற்றிய அறிவையும் மனப்பாங்கையும் முன்னரே வளர்த்து கொள்ள வேண்டும். இக் கட்டுரையில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுவதில் தாக்கம் செலுத்தும் ஆபத்துக் காரணிகளை அறிந்து கொள்வோம். இவற்றை தனிநபர் மட்டம், நெருங்கிய உறவு மட்டம், சமுதாய மட்டம், சமூக, கலாச்சார மட்டம் என்ற ரீதியில் விளக்கமாக நோக்குவோம்.
சிறுவர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுவதற்கு சிறுவர் சார்பில் ஏதுவாகவுள்ள காரணிகள் தனிநபர் மட்டத்தில் நோக்கப்படுகின்றன. பதினெட்டு வயதிலும் குறைந்தவர்களே சிறுவர்கள் என வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் வயது வந்தவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள்; தொடர்ச்சியாக வளர்ச்சியும் விருத்தியுமடைந்து கொண்டிருப்பவர்கள். சமூகத்திலுள்ள வயது வந்தோரிடம் காணப்படும் சமூக அனுபவம், பலம், அறிவு, முடிவெடுக்கும் ஆற்றல், பொருளாதார மட்டம் என்பன சிறுவர்களிடத்தில் குறைவாகவே காணப்படும். இதனால் இப் பருவத்தில் இன்னொருவரிடத்தில் தங்கி வாழும் தேவை ஏற்படுவதோடு, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தமும் இவர்களுக்கு ஏற்படுகிறது. இவ்வாறான காரணிகளுடன் இணைந்து சமூகம் பற்றிய அறிவின்மையும் எந்தவொரு சிறுவனையும் துஷ்பிரயோகத்தின் கையில் சிக்கவைத்துவிடுகிறது. ஆரோக்கியமான சிறுவர்களை காட்டிலும் விஷேட தேவைகளை கொண்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதற்கான அச்சுறுத்தல் அதிகளவில் காணப்படுகிறது. உடல், உள, அபிவிருத்திசார், உணர்வுசார் அல்லது கற்கும் ஆற்றலில் இடர்பாடுகளை கொண்ட சிறுவர்கள் விஷேட தேவை உடையவர்களாக கருதப்படுவர். இவர்களில் காணப்படும் அறியாமை, உடல் இயலாமை, ஆளுமைக் குறைபாடுகள், உளவியல் பிரச்சினைகள், பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் எதிர்த்து போராடும் திறன் இன்மை போன்றன துஷ்பிரயோகதாரர்களிடம் இவர்களை அகப்பட வைக்கின்றன. துஷ்பிரயோகத்திற்கு ஆளான சிறுவர்கள் உளவியல் நோய் நிலைக்கு ஆளாவதுடன், பல்வேறு ஆளுமை தொடர்பான பலவீனங்களுக்கும் முகம் கொடுக்கின்றனர். மேலும் இவர்கள் கோபம், எரிச்சல், விரக்தி போன்ற மறையான உணர்வுகளுடன் நீண்ட காலமாக வாழ்க்கையை கழிப்பதால் அதிருப்திகரமான, கொடூரமான நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளாக மாற்றமடைவர். இவ்வாறு சிறுவயதில் துஷ்பிரயோகத்தால் பாதிப்படைந்த சிறுவர்கள் எதிர்காலத்தில் துஷ்பிரயோகம் செய்வோராக மாறும் போக்கு காணப்படுகிறது. இது ஒரு நச்சு வட்டமாக உருவாகிறது.
சிறுவர்களின் உலகம் மிகவும் குறுகியது. அவர்களின் வீடு, பாடசாலை, சமூகம் என்பவற்றுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் நெருங்கிய உறவு மட்டத்தில் பெற்றோர், உறவினர்கள், சகபாடிகள், ஆசிரியர்கள் என்போர் அடங்குவர். சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் சில ஆபத்துக் காரணிகள் சிறுவர்களின் நம்பிக்கையை வென்ற அவர்களின் நெருங்கிய உறவுகளிலிருந்து உருவாகின்றமை கவலையளிக்கும் விடயமாகும்.
குழந்தை வளர்கின்ற போது அவனுக்கு அன்பான, மகிழ்ச்சிகரமான, ஒற்றுமையான குடும்ப சூழல் அமைத்துக் கொடுப்பது குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். குடும்பத்தில் பலவீனமான வளர்ப்பு முறை காணப்படும் பட்சத்தில் அச்சிறுவன் தனக்கு எதிரான அநீதிகளை இனங்காண இயலாதவனாகவும், அவற்றை எதிர்த்து போராட முடியாதவனாகவும் காணப்படுவதால் துஷ்பிரயோகத்தின் அபாயத்துக்கு உள்ளாகின்றான். குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள், குறிப்பாக தாய், தந்தைக்கிடையே ஏற்படும் முரண்பாடுகளால் அவர்கள் பிரிந்து வாழ்தல் சிறுவருக்கு அதிகளவிலான உளரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைவிட தங்களுக்கிடையான சண்டைகளால் கோபமடைந்த, விரக்தியுற்ற பெற்றோர் அவர்களின் கோபத்தை பிள்ளைகள் மேல் காட்டுவதால் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுகிறது. பணப்பேராசை பிடித்த இவ்வுலகில் பெற்றோரால் முதன்மையாக கொள்ள வேண்டிய தமது பிள்ளைகள் பற்றிய சிந்தனை இன்று இரண்டாம் மூன்றாம் மட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை கவலையளிக்கும் விடயமாகும். இதனால் தமது பிள்ளையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பாதுகாவலரே துஷ்பிரயோகிப்பது சமூக சீர்கேடாகும். உலகத்தில் முந்நூறு மில்லியன் சிறுவர்கள் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரால் உடல், உள துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் தாய் அல்லது தந்தை அல்லது இருவரும் வேலையின் நிமித்தம் வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வசிக்க வேண்டிய தேவை உருவாகுவதால் பிள்ளை இன்னொருவருடைய கண்காணிப்பில் வளர்க்கப்படுகிறது. இதன் போது பிள்ளையிடத்தில் பெற்றோரின் அரவணைப்பு இன்மையால் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு மிகவும் ஏதுவான சூழல் குடும்பத்தில் கட்டியெழுப்பப்படுகிறது. குறிப்பாக தாய் வெளிநாடு செல்வதால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகரிக்கிறது. இவ்வாறான சிறுவர்கள் உடல் ரீதியான தண்டனைக்கு உள்ளாகின்றனர். வீட்டில் காணப்படும் வேலைகள் இவர்கள் மீது சுமத்தப்படுவதால் பாடசாலை கல்வி பாதிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் தந்தையின் பாலியல் தேவையை நிறைவேற்ற பெண் பிள்ளைகள் பயன்படுத்தப்படுவதால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் நிலையும் காணப்படுகிறது. இதைவிட உரிய போசாக்குள்ள உணவு கிடைக்காததும் துஷ்பிரயோகமாக பார்க்கப்படுகிறது. மேலும் தாய் அல்லது தந்தையின் இறப்பால் அல்லது விவாகரத்தால் தனியொரு பெற்றோரை கொண்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் குடும்ப வறுமை காரணமாக சிறுவரின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதும் துஷ்பிரயோகமாகும். இதைவிட வறுமையின் நிமித்தம் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதுடன், வயதிற்கு இயலாத அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு, வளர்ந்தோர் போல நடத்தப்படுகிறார்கள். இதனால் சிறுவர்களின் கல்வி உரிமை இழக்கப்படுவதோடு உடல், உள தாக்குதல்களுக்கு ஆளாகுவதால் சிறுவர் துஷ்பிரயோகமாகிறது. இவற்றை விட பெற்றோரின் அறியாமை, மன அல்லது நரம்பியல் நோய்கள், போதைப் பொருள் பாவனை, குற்ற நடவடிக்கைகள் என்பவையும் அவர்களின் உண்மைக்கு மாறான எதிர்பார்ப்புகளும் சிறுவர் துஷ்பிரயோகத்தின் ஆபத்துக் காரணிகளாக திகழ்கின்றன.
சமூகத்தின் நற்பிரஜைகளை உருவாக்கும் இடங்களாக இருக்க வேண்டிய பாடசாலைகள், மதவழிபாட்டுத் தலங்கள் என்பன கூட இன்று சிறுவர் துஷ்பிரயோக நிலையங்களாக மாறியுள்ளமை மறுக்க முடியாத உண்மை ஆகும். பாடசாலை சிறுவர்களுக்கு கல்வியறிவையும், ஒழுக்கத்தையும் போதித்து சமூகத்துடன் இணைந்து வாழ கற்றுக் கொடுக்கிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வதோடு அவர்கள் வழங்கும் தண்டனைகள் மாணவர்களை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கிறது. கற்பித்தல் முறைமையில் உள்ள ஆசிரியர்களின் மனப்பாங்கே இங்கு துஷ்பிரயோகத்திற்கு காரணமாகிறது. இலங்கையின் கல்வி முறையை பொறுத்த வரையில் மாணவர்கள் அறிவை காட்டிலும் பரீட்சை நோக்குடன் கற்கவே திணிக்கப்படுகிறார்கள். போட்டித்தன்மை மிக்க பரீட்சை முறைகளால் பிள்ளைகளின் உள்ளத்தில் தாங்கிக் கொள்ள முடியாத அழுத்தம் பெற்றோராலும் ஆசிரியர்களாலும் ஏற்படுத்தப்படுகிறது. இவற்றை விட தங்களின் சமவயதிலுள்ள வன்முறையில் ஈடுபடும் நண்பர்கள், கேலி செய்யும் நண்பர்கள், போதைப் பொருளுக்கு அடிமையாகவுள்ள சக மாணவர்களாலும் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள்.
சிறுவர்களின் பாதுகாப்பை உச்ச அளவில் உறுதி செய்து ஒவ்வொரு பிள்ளையும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வளர வாய்ப்பை வழங்க வேண்டியது ஒவ்வொரு சமுதாயத்தினதும் பொறுப்பாகும். கடந்த காலங்களில் காணப்பட்ட கூட்டுக் குடும்ப முறை ஒவ்வொருவரதும் சுயநல மனப்பாங்கால் இன்று தனிக்குடும்பங்களாக மாறியுள்ளதால் எனது பிள்ளை என்ற குறுகிய சிந்தனை எம்மில் பலரிடம் தழைத்தோங்கி நிற்கிறது. இதனாலேயே பல துஷ்பிரயோகங்கள் கண்முன் நடந்தேறினாலும் காணாதது போல கடந்துவிடுகிறோம். இந்த மனநிலை மாறும் போது பல துஷ்பிரயோகங்கள் குறைவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன. மக்களிடம் சிறுவர் உரிமைகள், துஷ்பிரயோகங்கள் பற்றியும் அவை தொடர்பான சட்டங்கள் பற்றியும் போதிய அறிவின்மையும், சட்டம் மீதான உதாசீனத்தன்மையும் துஷ்பிரயோகத்திற்கு காரணிகளாக காணப்படுகின்றன. சட்ட நடவடிக்கைகள் உரிய முறையில் எடுக்கப்படாமையும், தீர்ப்புகள் நீண்ட கால தாமதத்துடன் வழங்கப்படுகின்றமையும், சட்டத்தின் ஓட்டைகளினால் தப்பிக்கக்கூடிய தன்மையும் துஷ்பிரயோகதாரிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. இவற்றை விட துஷ்பிரயோகம் செய்பவரின் அதிகாரம் மற்றும் பணம் மீதான அச்சமும் அவர்களை எதிர்த்து செயற்பட மக்களை துணிச்சலற்றவர்களாக்குகிறது. மேலும் சமூக மட்டத்தில் காணப்படும் வறுமை, தொழிலின்மை, போதைப் பொருள் பாவனை என்பனவும் அப்பாவி சிறுவர்கள் மீது துஷ்பிரயோகங்களாக பாய்கின்றன. எமது சமுதாயத்தில் காணப்படும் பாழடைந்த வீடுகள், ஒதுக்கப்பட்ட கட்டடங்கள், பாவனையற்ற காணிகள் போன்ற ஆள் நடமாட்டம் குறைந்த இடங்கள் பாதுகாப்பற்ற வலயங்களாக திகழ்வதுடன் பாலியல் துஷ்பிரயோகம் நடந்தேறும் களங்களாகவும் விளங்குகின்றன. இவற்றை விட சிறுவர் இல்லங்கள், தடுப்பு நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், சமய நிறுவனங்கள், சிறைச்சாலைகள், அகதி முகாம்கள் என்பவற்றில் நிறுவனமயப்படுத்தப்பட்ட சிறுவர்கள் அங்கு காணப்படும் தரமற்ற நிகழ்ச்சி திட்டங்கள், நிறுவனத்தின் ஒழுங்கற்ற தன்மை, கொள்கைகள் இல்லாமை, வளப்பற்றாக்குறை போன்றவற்றால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள்.
சிறுவர் துஷ்பிரயோகத்தின் ஆபத்து காரணிகளை சமூக, கலாச்சார மட்டத்தில் நோக்குவோமாயின் உலகமயமாக்கலுடன் கூடிய சமூக கட்டுப்பாடுகள் பலவீனமடைந்த தன்மை, பால்நிலைசார் மாற்றங்கள், போதைப் பொருள் பாவனையால் உருவாகியுள்ள பாதுகாப்பற்ற சூழல் என்பவற்றை முக்கியமாகக் கொள்ளலாம். அதி தொழில்நுட்பம் நாட்டின் அனைத்து இடங்களிலும் இன்று பரவியுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் செய்வோர் சிறுவர்களை இரையாக்கிக் கொள்ளும் முக்கிய ஊடகமாக இணையத்தளம் பயன்படுகிறது. தொழில்நுட்பத்தையும், தொழில்நுட்ப சாதனங்களையும் பாதுகாப்பாக கையாளத் தெரியாத சிறுவர்களின் அறிவின்மையே இதற்கு மூல காரணமாகும். இயற்கை அனர்த்தங்கள், போர்ச்சூழல் என்பவற்றால் குடும்பங்களை, வீடுகளை இழந்து வீதிகளில் வாழும் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. ஒவ்வொரு யுத்தமும் சிறுவர்களுக்கு எதிரானது. போரினால் சிறுவர்கள் மரணிக்கிறார்கள்; காணாமற் போகிறார்கள்; அநாதைகளாக்கப்படுகிறார்கள்; அங்கவீனர்களாக்கப்படுகிறார்கள்; உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவை அனைத்தும் சிறுவர் துஷ்பிரயோகமாகும்.
ஒரு நாட்டின் எதிர்காலத்தை எழுதவிருக்கும் பலமிக்க பேனாவாக இருப்பவர்கள் சிறுவர்கள். அவர்களுக்கு வன்முறைகளற்ற பாதுகாப்பான சூழலை உருவாக்கித்தரும் கடமை எம்முடையது. சிறுவர் துஷ்பிரயோகத்தின் ஆபத்துக் காரணிகளை வெறுமனே அறிந்திருப்பதோடு மட்டும் நிற்காது அவற்றை இனங்கண்டு பாதுகாப்புக் காரணிகளாக மாற்றியமைப்பது எமது பொறுப்பாகும். நாம் இன்று ஓரளவேனும் பாதுகாப்பாக வாழ வழி செய்த எமது முன்னோரின் முயற்சியை மெச்சி இன்றைய எமது சிறுவர்கள் மென்மேலும் பாதுகாப்பாக வாழ ஒன்றாக கை கொடுப்போம்.
உசாத்துணைகள்
2. Handbook on Child Protection – 2019 [online] available from: http://www.childprotection.gov.lk/?page_id=2211
Comments