சிறுவர்களுக்கான சிறுவர் நேயமுள்ளதும் பாதுகாப்பு மிக்கதுமான சூழலொன்றை கட்டியெழுப்புவோம்
- rotaractmfc
- Jan 9, 2021
- 4 min read
சிறுவர் துஷ்பிரயோகமும் சட்டப்பிண்ணனியும்
Written by: Archuthan Nithiyananthan, Faculty of Medicine, University of Colombo
மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தின் மிகவும் அழகானதும் முக்கியமானதுமான பருவம் குழந்தைப்பருவமாகும். எந்தவிதமான எதிர்மறையான சிந்தனைகள், மனச்சுமைகள், எதிர்பார்ப்புக்கள், வஞ்சனைகளற்ற தூய்மையான மென்மை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். குழந்தைப்பருவத்தில் அவர்களின் மனங்களில் விதைக்கப்படுபவைதான் நாளை சமூகத்தில் அவர்கள் ஆளாக்கப்படுகையில் அறுவடை செய்யப்படுகின்றது. இங்கு நல்லவை விதைக்கப்பட்டு அரவணைப்புடன் வளரும் குழந்தை நாளைய சமூகத்தில் சிறந்த பிரஜையாக வெளிவருகின்றான். மாறாக குழந்தைப்பராயத்தில் அதிக மனத்தளும்புகளோடும், அச்சுறுத்தல்களோடும், பிழையான வழிகாட்டல்களுடனும், அரவணைப்புகளின்றி வளரும் பிள்ளை நாளைய சமுதாயத்தில் நன்னடத்தையற்ற சவால்களுடன் கூடிய பிரஜையாக வெளிப்படுத்தப்படுகின்றான். இவ்வாறான நிலைமைகளைக் கருத்திற் கொண்டு உலக நாடுகளனைத்திலும் சிறுவர் தினம், சிறுவர் உஉரிமைகள், சிறுவர் வன்முறைக்கெதிரான தினம் போன்றவை வருடாவருடம் கொண்டாடப்படுகின்றது. இத்தினங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி இவை தொடர்பான முக்கியத்துவத்தை உணர்த்தி பொறுப்புணர்வுடன் அனைவரும் செயற்படுத்துவதற்கு வழிகாட்டுகின்றன.
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள், நாளைய உலகத்தைப் பொறுப்பேற்கவிருக்கும் சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும். இன்றைய காலகட்டங்களில் உலக நாடுகளில் சிறுவர்கள், பல்வேறு வகைகளில் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் நெருக்கடிகளிற்கு முகம் கொடுக்கின்றனர் என்பதனை சமூக வலைத்தளங்களினூடாக அறிய முடிகின்றது. குறிப்பாக பாலியல் ரீதியான துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல், சிறுவர்களின் கல்வியை இடைநிறுத்துதல், சிறுவர்களைக் கடத்துதல், உடல் ரீதியாக தண்டனை வழங்குதல் போன்றவை பெரும்பான்மையாக முன்னிலைப்படுத்தப்படுகின்றது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுக்களின் பிரகாரம் சிறுவர் துஷ்பிரயோகம் என்பது குழந்தைகள் விருத்தெரியாத வயதில் அவர்களின் ஒப்புதலுடனோ அல்லது ஒப்புதலின்றியோ சட்டத்தால் குற்றம் என்று சுட்டிக்காட்டிய செயலில் ஈடுபடுத்துவது துஷ்பிரயோகம் எனப்படுகின்றது.
சிறுவர் என்பது இலங்கை சிறுவர் சாசனப்படி 18 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களாவர்.
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கான முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பாக கொவிட் – 19 காலப்பகுதியில் அதிகளாவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை மிகவும் துக்ககரமான நிலைமையாகும். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தகவல்களின்படி நாட்டின் பல்வேறு பொலீஸ் பாதுகாப்புப்பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலிருந்து இவ்வருடத்தின் (2020 இல்) முதல் பதினைந்து நாட்களுக்குள் 140ற்கும் மேற்பட்ட கற்பழிப்பு, 42 பாலியல் வன்கொடுமை, 54 வேறுவிதமான சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன.
கொவிட் – 19 காலப்பகுதிகளில் குறிப்பாக மார்ச் 16 தொடக்கம் யூன் 16 வரையான காலப்பகுதிகளில் 3500 சிறுவர் துஷ்பிரயோக முறைப்படுகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக கொழும்பு, கம்பஹா, குருநாகல், காலி ஆகிய மாவட்டங்கள் முன்னிலைப்படுத்திக் காணப்படுகின்றன. இருப்பினும் இன்றுவரை முறைப்பாடுகள் பதிவின்றி காணப்படும் துஷ்பிரயோகச் செயற்பாடுகள் பல காணப்படுகின்றன என்பதும் கவலைக்குரியதும் பாரதூரமானதுமாகும்.
கொவிட் – 19 தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டு வலயங்களாக நாடு முடக்கப்பட்ட காலகட்டங்களில் வீட்டு வன்முறைகள் அதிகரித்தமை, பண நெருக்கடிகள், பாடசாலைகளின்மை, சிறுவர்கள் தமது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ள முடியாத சூழ்நிலைகள் என்பவை துஷ்பிரயோகங்களின் அதிகரிப்பிற்கு ஏதுவான காரணங்களாகக் காணப்படுகின்றன. இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் ஏற்பட்ட விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், வாழ்க்கை வசதிகளில் ஏற்பட்ட அளவிற்கு மீறிய முன்னேற்றங்கள், கைத்தொழிற் புரட்சிகள், நகரமயமாக்கல், சட்டங்கள், தண்டணைகளில் காணப்படும் இலகல்தன்மை, சமூகத்தில் கௌரவப் பிரச்சினைகள், அரசியல் செல்வாக்குகள், இலஞ்ச மோசடிகள், போதைப்பொருட் பாவனைகளின் அதிகரிப்பு, வெளிநாட்டு உறவுகளின் ஆதிக்கம், கலாசார மாற்றங்கள் என்பவை அதிகளவான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
இலங்கையின் அரசியல் யாப்பானது சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையிலும் தண்டிக்கும் வகையிலும் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
இலங்கையில் சிறுவர் நீதியை உறுதிப்படுத்தும் ஆரம்ப நிலை சட்டங்களாக பின்வருவன உள்ளன.
1. 1939 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க (CYPO) சிறுவர் மற்றும் இளம் பிராயத்தினர் கட்டளைச் சட்டம்;
2. 1948 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க குற்றவாளிகள் நன்னடத்தைச் கட்டளைச் சட்டம் (POA); உம்
3. 1944 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க இளைஞர் குற்றவாளிகள் கட்டளைச்சட்டம் (YOTSA)
இவை தவிர 1956 இன் 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்துவது பற்றிய சட்டம்,கடைகள் மற்றும் அலுவலக ஊழியர் கட்டளை சட்டம் ,நாடோடி கட்டளை சட்டம் , 1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டம், 2005 இன் 16 ஆம் இலக்க சுனாமி சட்டம், பராமரிப்பு கட்டளை சட்டம், தத்தெடுத்தல் கட்டளை சட்டம், 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் ஆகியனவும் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன.
சிறுவர் மற்றும் இளம்பிராயத்தினர் கட்டளை சட்டம் 1950 களின் ஆரம்பத்தில் அமுலுக்கு வந்தது ." வேண்டியளவு கிடைக்கப்பெறாத " மற்றும் "தவறாளிகளான " இரு வகையினர் தொடர்பிலும் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை பற்றி இது எடுத்துரைக்கிறது .இச்சட்டமானது 3 நபர்களால் நடைமுறைபடுத்தப்படுகிறது.
1.போலீசார்
2.நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தர்
3.நீதிவான் நீதிமன்றம்
இக்கட்டளைச்சட்டத்தின் 21 ஆவது பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள இச்சேமநல கோட்பாட்டின் முக்கியத்துவம் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயத்தின் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சட்டத்தின் 5(2) ஆம் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள பிள்ளையின் அதியுயர் நலன் கோட்பாட்டினால் தற்போது விஸ்தரிக்கப்படுகிறது.
இளம்பிராயத்தினரின் வழக்குகள் பொதுமக்கள் முன்னிலையில் இடம்பெறாது விசேட நீதிமன்றம் முன்னிலையில் நடைபெறுவதை இச்சட்டம் உறுதி செய்கிறது.மற்றும் இங்கு நடைபெறும் நடவடிக்கை முறைகளின் இரகசிய தன்மை பேணப்படலையும் இது உறுதி செய்கிறது.
சிறுவர்களுக்கெதிரான குற்ற செயல் மற்றும் துன்புறுத்தல்களை தடுப்பற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டிருப்பது 1883 இன் தண்டனை சட்டக் கோவையிலாகும் .இதில் பல்வேறு தவறுகள் குறிப்பிடப்பட்டு அதற்கான தண்டனைகள் விவரிக்கப்பட்டுள்ளன.இதனுடன் 1939 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க (CYPO) சிறுவர் மற்றும் இளம் பிராயத்தினர் கட்டளைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் உறுப்புரைகளும் தண்டனை மற்றும் தண்ட பணங்கள் பற்றி விபரிக்கின்றது.
சுனாமி சட்டம் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்டதுடன், தத்தெடுத்தல் சட்டமானது மகவேற்பின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை விபரிக்கின்றது.
மேற்படி சட்டங்கள் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதில் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக இலங்கை 1990 ஆம் ஆண்டு சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் (CRC) கையொப்பமிட்டு 1991 ஜூலை 12ஆம் திகதி அதனை அங்கீகரித்தது.
1996 டிசம்பரில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு பல சட்ட திருத்தங்களுக்கும் நிர்வாக சீர்திருத்தங்களுக்கும் பரிந்துரை செய்தது. அவை ஜனாதிபதி செயலணிஅறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.ஜனாதிபதி செயலணியின் மிக முக்கியமான பரிந்துரைகளில் ஒன்றின் படி 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க உறுப்புரை 09 இற்கு அமைவாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) அமைக்கப்பட்டது. சிறுவர்களுக்கு பாதுகாப்பான சமூக சூழலை கட்டியெழுப்பும் சவாலை நீண்டகாலமாக எதிர்நோக்கியுள்ளது .அதில் ஒரு மைல் கல்லாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சட்டங்களும் பாதுகாப்பு அதிகார சபைகளும் இருந்த போதிலும் பெருமைப்பாலான குற்றங்களுக்கான தண்டனைகளும் தண்டபணங்களும் விதிக்கட்ட போதிலும் சிறுவர் துஷ்பிரயோகம் முழுமையாக ஒழிக்கப்படாமையும் இன்னமும் அதிகரித்துச்செல்வதும் 21 ஆம் நூற்றாண்டின் அவலங்களின் ஒன்றாகும். சட்ட ஏற்பாடுகளிலும் தண்டனைப்பிரிவுகளிலும் காலத்திற்கேற்ற மாற்றங்கள் பல கொண்டுவரப்படாமையும் சிறுவர் பாதுகாப்பில் ஒரு குறைபாடாகும்.மேலும் இச்சட்டங்களின் வழியே பொதுமக்கள் நீதியை பெற்றுக்கொள்ளும் அளவு மக்களிடையே போதியளவு அதிகரிக்காமையும் கவலைக்குரியது. எனினும் ஆயிரக்கணக்கான சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அச்சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடத்தே இல்லாமையும் குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான புரிதலும் தெளிவும் இன்மையும் பல குற்றவாளிகளை தப்பிக்க செய்கிறது என்பதே நிதர்சனம்.
சிறுவர்களின் பாதுகாப்பில் முதல் அக்கறை பெற்றோர்களிடமே காணப்பட வேண்டும். பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் அவர்களை உங்கள் கண்காணிப்பில் வைத்திருங்கள். பிள்ளைகளிற்கு அன்பான முறையில் துஷ்பிரயோகத்திற்குள்ளாகாமல் பாதுகாப்பாக இருக்க கற்றுக்கொடுங்கள். கூடியளவு நேரத்தை உங்கள் குழந்தைகளின் உணர்வுகளை செவிமடுப்பதற்காகச் செலவழியுங்கள். எமது நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமப்பெரியவர்களும் (அரசியல், சமூக, சமய) தமது கிராமத்துச் சிறார்களின் பாதுகாப்பில் பொறுப்புணர்வுடனும் கரிசனையுடனும் அக்கறை கொள்வார்களானால் எமது தேசத்தின் ஒட்டுமொத்த சிறார்களின் எதிர்காலங்களும் வெளிச்சம் நிறைந்த பாதைகளாக அமையும் என்பதில் ஐயமில்லை.
பாடசாலைகளாக இருந்தாலும் சரி, வீடுகளாயிருந்தாலும் சரி, பொது இடங்களாக இருந்தாலும் சரி, சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பயமற்ற சூழலை உருவாக்கிக் உருவாக்க நாட்டின் சட்டம் முயற்சிக்கிறது. நாட்டின் குடி மகன்களாக அச்சட்டங்களை நடைமுறைப்படுத்தும் கடமை நமக்கும் உள்ளது கிராமங்கள், வீடுகள், பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வை அனைவரிடத்திலும் விளங்கச்செய்தல் வேண்டும். இதன்மூலம் குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்கமுடியும். ஆயிரக்கணக்கான சிறுவர்கள் உடல், உள ரீதியான பாலியல் துஷ்பிரயோகங்கள், தொழிற்கமர்த்தல், கல்விகற்காமை, அடிமைப்படுத்தல் போன்ற இழிவான செயல்களிலிருந்து விடுவிக்கவேண்டிய இத்தேசத்தின் குடிமகனான ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்புமாகும்.
உசாத்துணை
Ministry of Justice - Sri Lanka. (2016). Lawnet. Retrieved from https://www.lawnet.gov.lk/
National Child Protection Authority. (n.d.). Retrieved from தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் வரலாறு: http://www.childprotection.gov.lk/?page_id=32
UNICEF. (2008). குற்றவியல் நீதி பரிபாலன செயன் முறையுடன் தொடர்புடைய சிறுவர்களின் சட்ட பாதுகாப்பு .
தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை . (2019). சிறுவர் பாதுகாப்பு பற்றிய கையேடு.

Comentarios